1000 வீடுகளுக்கு இலவச காய்கறிகளை அனுப்பிய முன்னாள் எம்எல்ஏ ப. குமார்!

1000 வீடுகளுக்கு இலவச காய்கறிகளை அனுப்பிய முன்னாள் எம்எல்ஏ ப. குமார்!



திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் ப.குமார் தனது சொந்த நிதியில் இருந்து தினமும் 1000 இல்லங்களுக்கு இலவச காய்கறிகள் வழங்கினார். நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பொதுமக்களுக்கு சேவை நோக்குடன் அதிமுக நிா்வாகிகள் தங்களது பங்களிப்பாக அத்தியாவசிய தேவைகளை பொதுமக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர்.


ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளான காய்கறிகளை வாங்கி வரும் சாக்கில் குடும்பம் குடும்பமாக வீட்டை விட்டு வெளியே வரத் துவங்கியுள்ளனர். அரசு சமூக விலகலை கருத்தில் கொண்டுதான் ஊரடங்கு பிறப்பித்திருந்தாலும் பொதுமக்கள் காதில் வாங்கிக்கொள்ளாமல் ஜோடி போட்டு அரசு விதித்த ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு நின்று பொருட்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை மறந்து நெருக்கியடித்துக் கொண்டிருக்கின்றனர்.


இதனையறிந்த திருச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப.குமார், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்க்கும் பொருட்டு தனது சொந்த நிதியில் இருந்து தனது தொகுதி வாழ் மக்களுக்காக இல்லம் தோறும் தேடிச்சென்று பொதுமக்களுக்குத் தேவையான காய், கனிகளை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கும் சேவையைத் தொடங்கி இருக்கிறார்.


திருச்சி பொன்மலைப்பட்டி அந்தோனியார் கோயில் தெருவில் உள்ள பொதுமக்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய், கனி, அரிசி கொண்ட ஒரு தொகுப்பு பையினை வீடு வீடாகச் சென்று வழங்கினார்.


2வது நாளாக இன்றும் திருவெறும்பூர் பகுதிகளில் உள்ள நேதாஜிநகர், கக்கன் காலனி மற்றும் மேலகல்கண்டார்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இந்த தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்வில் திருவெறும்பூர் பகுதி அதிமுக செயலாளர் பாஸ்கர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.