முதல்வர்களுடன் மோடி ஆலோசனை துவங்கியது.. எடப்பாடியாரும் பங்கேற்பு.. லாக்டவுன் நீட்டிக்கப்படுமா?
கொரோனா நோய் தடுப்பு மற்றும் லாக்டவுன் நீட்டிப்பு குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். பல முக்கிய முடிவுகள் இதில் எட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்புக்காக நாடு முழுக்கவும் 21 நாள் லாக்டவுனில் வைக்கப்பட்டுள்ளது. இன்று லாக்டவுனின் 18வது நாள் ஆகும். வரும் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14ம் தேதியுடன் லாக்டவுன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டுமா என்று முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி முடிவு செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றுள்ளார்.
அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஒரே மாதிரியான நேரக்கெடு கொடுக்கப்பட்டு, அவர்கள் கருத்தை மோடி கேட்க உள்ளார். சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமாக பரவும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த பல மாநிலங்கள் லாக்டவுன் நீட்டிப்பை ஆதரித்ததையடுத்து, ஏப்ரல் 14 க்கு அப்பால் மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுனை நீட்டிக்கக்கூடும் என்றே தெரிகிறது.
பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் சமீபத்தில் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார். அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14 ஆம் தேதி லாக்டவுனை எல்லா இடங்களிலும் நீக்க முடியாது என்று தெளிவுபடுத்தியிருந்தார்.
அதேநேரம், சில பகுதிகளில் தளர்வு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை இன்றைய கூட்டத்தில் மோடி உறுதி செய்வார். அரசாங்கத்தின் முன்னுரிமை "ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதாகும்" என்று மோடி கூறி வருவதை பார்த்தால் லாக்டவுன் இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.
ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே, மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.