சுனாமி வந்தாகூட ஸ்டாலின் குறை சொல்வார்.. குறை சொல்ற கட்சி திமுக.. நோயிலும் அரசியலா.. முதல்வர் வேதனை

சுனாமி வந்தாகூட ஸ்டாலின் குறை சொல்வார்.. குறை சொல்ற கட்சி திமுக.. நோயிலும் அரசியலா.. முதல்வர் வேதனை



 "சுனாமி வந்தால்கூட ஸ்டாலின் குறை சொல்லுவார்.. குறை சொல்றதுக்கு ஒரு கட்சி இருக்குன்னா அது திமுக கட்சிதான்.. வேற எந்த கட்சியும் கிடையாது... நோயில்கூட இன்னைக்கு அரசியல் செய்றாங்க.. வேதனையா இருக்கு.. ரொம்ப வருத்தப்படறேன்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாா்,.





ஊரடங்கு அமலில் இருப்பது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.





இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கொரோனா தடுப்பு குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் விலாவாரியாக எடுத்து வைத்து பேசினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் டக் டக்கென பதில் அளித்தார். அப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் திமுக தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முதல்வர் சொன்ன பதில் இதுதான்:




"அவங்க ஆட்சி காலத்தில் வெள்ளம் வந்ததுக்கும் புயல் வந்ததும் எவ்வளவு ரூபா கொடுத்தாங்கன்னு பாருங்க.. 2 லட்சம்தான் நிவாரணம் தந்தாங்க.. அவரே சொல்றாரு 144 தடை உத்தரவு நீடிக்க வேணும் நீடிக்க வேணும்னு சொல்றாரு.. 144 தடை உத்தரவை அரசு பின்பற்றுது. ஆனால், அவர்தானே எங்களுக்கு முன்னாடியே 144 தடையை ஏன் செய்யலை, ஏன் செய்யலைன்னு கேட்கிறாரு.. அதை அரசு நடைமுறைப்படுத்தினால் ஏன் செய்றிங்கன்னு கேட்கிறாரு.



 

உங்களுக்கு அத்தனை ஊடகங்களை தெரியும், சட்ட விதிகள் தெரியும், அமைச்சரா இருந்திருக்காரு, ஒரு கட்சி தலைவரா இருக்கிறாரு.. அதைதான் நாங்க இப்போ அமல்படுத்தி உள்ளோம்.. 144 தடையை யார் செய்ய முடியும்? பிரதமர்தான் செய்ய முடியும்.. முதலமைச்சர்தான் செய்ய முடியும்... வேற யார் செய்ய முடியும்? சொல்லுங்க நீங்களே.. இதெல்லாம் திட்டமிட்ட விமர்சனம்.



 


இந்த அரசு சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுத்து கொண்டிருக்கிறது.. அதற்கு அவர் தடை போடறார் அவ்ளோதான்.. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் இன்னைக்கு நாடாளுமன்றத்திலே 38 பேர் இருக்காங்க. என்ன குரல் கொடுக்கிறார்கள்? அன்னைக்கு அம்மா இருக்கும்போது, அடிக்கடி எதிர்க்கட்சி தலைவர் குறுக்கிடுவார்.. கேள்வியா கேட்பார், நீங்க கட்சியை சேர்ந்தவர்கள் 37 பேர் இருக்கீங்களே, என்ன சாதிச்சீங்கன்னு? அடிக்கடி அப்போ கேள்வி கேட்பார். அதே கேள்வியை இன்னைக்கு நாங்க கேட்கிறோம்.


இன்னைக்கு மத்திய அரசிடம், உதவியை கேட்க பெறுகின்ற சூழலில், கேட்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.., அவர்களை ஏதாவது வற்புறுத்தினார்களா? அரசை குறை சொல்றாங்களே, இவங்களை எல்லாம் நாட்டு மக்கள் எதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்?

 

நாட்டு மக்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறபோது, மத்திய அரசிடம் வலியுறுத்தி தேவையானதை பெற்று மாநில அரசுக்கு உதவி செய்ய வேண்டும், அதற்காகத்தான் இவர்களை தேர்வு செய்தார்கள். இதற்காக இதுவரை குரல் கொடுத்தார்களா? இதற்காக ஏதாவது ஸ்டெப் எடுத்திருக்காங்களா? எதையுமே செய்யல.. குறையை மட்டுமே கூறி கொண்டிருக்கிறார்கள்..

 

அது கஜா புயல் வந்தாலும் குறை சொல்வார், தானே புயல் வந்தாலும் குறை சொல்வார், வர்தா புயல் வந்தாலும் குறை சொல்வார்.. ஒகி புயல் வந்தாலும் குறை சொல்லக்கூடியவர் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அவர்கள் மட்டுமே.. சுனாமி வந்தாலும் குறை சொல்லுவார்.. குறை சொல்றதுக்கு ஒரு கட்சி இருக்குன்னா அது திமுக கட்சிதான்.. வேற எந்த கட்சியும் கிடையாது.


நோயில்கூட இன்னைக்கு அரசியல் செய்றாங்க.. வேதனையா இருக்கு.. உண்மையிலேயே ரொம்ப வருத்தப்படறேன்.. நல்ல கருத்துக்களை அவர் சொல்லலாம்.. ஆனா எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது... தமிழ்நாட்டிலதான் இப்படிப்பட்ட நிலைமை இருக்கு.. இப்போ வந்திருக்கிற உயிர் காக்கிற பிரச்சனை.. இன்னைக்கு நாட்டு மக்களை காக்க வேண்டும்..

 

அத்தனை கட்சிகளும் ஒன்று சேர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும்.. மற்ற மாநிலங்களில் குரல் கொடுக்கிறாங்க.. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த நோயை வெச்சிகூட அரசியல் பண்ணும் கட்சிகள் சில இருக்கின்றன.. வேதனை அளிக்கிறது" என்றார்.