சந்தா்ப்பவாத அரசியல் செய்கிறாா் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சந்தா்ப்பவாத அரசியல் செய்கிறாா் ஸ்டாலின். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை




கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். பரிந்துரை என்ற பெயரில் தமிழக அரசு மீது பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்தியுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


கொரோனா விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான புள்ளி விவரங்களை தமிழக அரசு எந்த ஒளிவு மறைவுமின்றி வெளியிட்டு வருவதாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


மூத்த அதிகாரிகள் நாள்தோறும் ஊடகங்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருவதால், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும், அரசின் மீது நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் ஜனவரி மாதத்திலேயே இந்நோயினை கண்டறியும் பரிசோதனை கருவிகள், முழு உடல் கவச உடைகள் வாங்க கொள்முதல் ஆணைய வழங்கிய தீர்க்கதரிசியான அரசு தமிழக அரசு என முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதை போன்று சித்தரித்து பரிந்துரை செய்கிறேன் என்ற பெயரில் தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றஞ்சாட்டியிருப்பது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளார்.


இது மு.க.ஸ்டாலினின் சந்தர்ப்பவாத அரசியலை காட்டுவதாக சாடியுள்ளார். கொரோனா தடுப்பு விவகாரத்தில் இந்தியாவிற்கே தமிழக அரசு முன்னுதாரணமாக திகழ்ந்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.